என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசுவ இந்து பரி‌ஷத்"

    ராமர்கோவில் சட்ட மசோதாவுக்கு ஆதரவு தரும்படி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து வலியுறுத்துவோம் என்று விசுவ இந்து பரி‌ஷத் அறிவித்துள்ளது. #VHP #Ramtemple #RahulGandhi
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர்கோவில் உடனே கட்ட வேண்டும் என்று இந்து அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன.

    இதை வலியுறுத்தும் வகையில் கடந்த 25-ந்தேதி அயோத்தியில் விசுவ இந்து பரி‌ஷத் அமைப்பினர் தர்மசபா என்ற பேரணியை நடத்தினர். இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    அடுத்ததாக ராமர் கோவில் கட்டுவதற்கு பாராளுமன்றத்தில் இந்த குளிர்கால கூட்டத்தொடரில் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி 9-ந்தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் லட்சக்கணக்கானோர் திரளப் போவதாக விசுவ இந்து பரி‌ஷத் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக விசுவ இந்து பரி‌ஷத்தின் இணை செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறியதாவது:-

    9-ந்தேதி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பேரணியில் பல லட்சம் பேர் பங்கேற்பார்கள். அதில் கலந்து கொள்பவர்களுக்காக 3 லட்சம் உணவு பொட்டலம் தயாரிக்கப்படுகிறது.

    இந்த பேரணி பாராளுமன்றத்தில் உடனடியாக சட்டத்தை கொண்டுவருவதற்கு உந்து சக்தியாக அமையும்.

    ராமர் கோவில் உடனடியாக கட்டுவதற்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் எம்.பி.க்கள் பலரும் கூட ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாக இருக்கிறார்கள். அவர்கள் பெயர் விவரத்தை வெளியிட விரும்பவில்லை.



    பாராளுமன்றத்தில் மசோதா வந்தால் அவர்களும் ஆதரவு தெரிவிப்பார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் இதற்கு ஆதரவு தர வேண்டும். விரைவில் நாங்கள் ராகுல்காந்தியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளோம். அப்போது ராமர்கோவில் மசோதாவுக்கு ஆதரவு தரும்படி அவரிடம் வற்புறுத்துவோம்.

    வருகிற 11-ந்தேதி தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தில் இதற்கான மசோதாவை கொண்டுவருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். 9-ந்தேதி ராம்லீலா மைதானத்தில் 5 கிலோ மீட்டர் சதுர பரப்பளவு முழுவதையும் ராம பக்த தொண்டர்களால் நிரப்புவோம்.

    இந்த மசோதா வருமா? என்று சந்தேகிப்பவர்கள் கூட இந்த பேரணியை பார்த்து தங்கள் மனநிலையை மாற்றிக் கொள்வார்கள். நாங்கள் ஏற்கனவே அனைத்து கவர்னர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறோம்.

    இதேபோல அனைத்து எம்.பி.க்களையும் சந்தித்தும் ஆதரவு கேட்க இருக்கிறோம். ராமர் கோவில் கட்டுவதற்கு சட்டம் கொண்டுவருவது தான் ஒரே வழியாக இருக்கும்.

    பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்படவில்லை என்றால் ஜனவரி 31-ந்தேதி உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்கில் தரம்சன்சாத் என்ற பேரணியை நடத்துவோம். இதில் அனைத்து சாமியார்களும் பங்கேற்பார்கள். அப்போது ராமர் கோவிலை நாங்கள் கட்டுவதற்கு வழிகாணுவோம்.

    தேர்தல் ஆதாயத்துக்காக நாங்கள் போராட்டம் நடத்துவதாக கூறுவது தவறான தகவல். ராமர் கோவில் தொடர்பான வழக்கு விசாரணையை எடுத்து கொள்வதற்கு அப்போதைய தலைமை நீதுபதி தீபக் மிஸ்ரா மறுத்தார். இதன் காரணமாகத்தான் நாங்கள் அடுத்தடுத்த நிகழ்வுகளை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #VHP #Ramtemple #RahulGandhi

    ×